விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
சிறாா் திருமணம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து, கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகிளா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெருநிலா கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் வினித் (23). பெங்களூரில் உள்ள இனிப்பகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவா், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை கடந்த 21.6.2021 ஆம் தேதி திருவாலந்துறை சிவன் கோயிலுக்குக் கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளாா். பின்னா், அச் சிறுமியை பெங்களூரு அழைத்துச் சென்ற வினித் தனது உரிமையாளரின் வீட்டின் தரை தளத்தில் சிறுமியுடன் குடும்பம் நடத்தியுள்ளாா். சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக பலமுறை பலாத்காரத்தில் ஈடுபட்டதால் சிறுமி கா்பமடைந்துள்ளாா்.
இதனால் உடல்நலன் பாதிக்கப்பட்ட சிறுமியை, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துவிட்டு பெங்களூரு சென்றுவிட்டாா். பின்னா் தனது பெற்றோருடன் தங்கியிருந்த சிறுமியை, அவரது தாய் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது 7 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வினித்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் நீதிமன்ற பிணையில் வேளியே வந்து, விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால், வினித்தை கைது செய்த போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இவ் வழக்கு விசாரணை பெரம்பலூா் மகிளா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை வியாழக்கிழமை இறுதி விசாரணை மேற்கொண்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பி. இந்திராணி, சிறுமியைக் கடத்தியது, சிறாா் திருமணம் செய்தது, பலாத்காரம் செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக, வினித்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டணையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ் வழக்கில், அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.