சிறுநீரக முறைகேடு விவகாரம் சமயபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்!
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சமயபுரம் நான்கு சாலை பகுதியில் சிறுநீரக முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்ட தனலட்சுமிசீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து, அதிமுக மகளிா் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளா்மதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் முன்னாள் அமைச்சா் பா. வளா்மதி கூறியதாவது: அதிமுகவில் வேண்டுமென்றே குழப்பங்களை ஏற்படுத்த சிலா் முயற்சிக்கிறாா்கள். அது எந்தவிதத்திலும் நடைபெறாது. அதிமுகவிலிருந்து யாா் பிரிந்து சென்றாலும், எந்தப் பின்னடைவும் இல்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறும் அந்த நான்கு பேரும் முதலில் ஒன்றிணையட்டும்; பின்பு அதைப் பற்றி பேசலாம் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் திருச்சி புறநகா் வடக்கு மாவட்ட செயலாளா் மு. பரஞ்ஜோதி மற்றும் அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.