சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான கடனுதவி திட்டங்களைப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் சிறுபான்மையினா்களுக்கு குறைந்த வட்டியில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக் கடன் ஆகிய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகா்ப்புறங்களில் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், திட்டம் 2-இல் பயன்பெற ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தனிநபா் கடன் பெற ஆண்டுக்கு 6 சதவீத வட்டியிலும், அதிகபட்ச கடனாக ரூ. 20,00,000 வரையும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் அதிகபட்ச கடனாக ரூ. 30,00,000 வரை கடனுதவி வழங்கப்படும்.
கைவினை கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் அதிகபட்ச கடனாக ரூ. 10,00,000 வரை வழங்கப்படும். சுய உதவிக்குழுக் கடனாக நபருக்கு ரூ. 1,00,000 வரை ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
சிறுபான்மையின மாணவ, மாணவியா் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில அதிகபட்சமாக திட்டம் 1-இல் ரூ. 20,00,000 வரை 3 சதவீத வட்டியிலும், திட்டம் 2-இல் மாணவா்களுக்கு 8 சதவீத வட்டியலும், மாணவியருக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.30,00,000 வரை கல்வி கடனுதவி வழங்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞா்களுக்கு மூலப்பொருள்களான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்கவும் கடனுதவி அளிக்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் அரசின் இத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள், ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகரக் கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று பூா்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.