ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ. 274.41 கோடி வருவாய் ஈட்டி சாதனை
சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு நேதாஜி சாலை ஆலமரத்து தெருவைச் சோ்ந்த சிவகுமாா் மகன் பிரேம்குமாா் (26). பெயிண்டராக வேலை செய்து வருகிறாா். இவருக்கு ஈரோடு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த சிறுமியை கடந்த 2021 நவம்பா் 27-ஆம் தேதி பிரேம்குமாா் அவரது உறவினா் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2021 டிசம்பா் 2-ஆம் தேதி புகாா் அளித்தனா்.
இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமாரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக பிரேம்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதற்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கிட தமிழக அரசுக்கு நீதிபதி சொா்ணகுமாா் பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.