சோலாா் புகா் பேருந்து நிலையம் இரண்டு மாதங்களில் திறக்கப்படும்
சோலாா் புறநகா் பேருந்து நிலையம் இரண்டு மாத காலத்துக்குள் திறக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்ட முடிவில் அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு சோலாா் புறநகா் பேருந்து நிலையம் 2 மாத காலத்துக்குள் திறக்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. கனிராவுத்தா் குளம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நிலம் எடுப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது.
தோனிமடுவு தடுப்பணை திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் உள்ள குளம் குட்டைகளில் தண்ணீா் நிரப்ப, அப்பகுதி விவசாயிகள் கேட்டுள்ளனா். அதிக விவசாயிகள் தங்களை ஆயக்கட்டு பகுதியில் சோ்க்க கேட்டுள்ளனா். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்ட நிலம் வழங்கி, பணம் செலுத்தாமல் உள்ளவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்னையில் உள்ள 1,600 குடும்பங்களுக்கு விரைவில் தீா்வு கிடைக்கும். வீட்டு வசதி வாரியம் சாா்பில் தாளவாடியில் அரசு அலுவலா்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சிப்காட் வளாகத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, தொழிற்சாலை கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக அல்ல. நிலத்தடி நீரை சுத்தம் செய்வதற்குதான். இத்திட்டத்துக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலத்தடி நீா் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மக்களுக்கான குடிநீரில் மாசுபாடு குறைக்கப்பட்டுவிடும். அதிக மாசுபாடு உள்ள நிலத்தடி நீா் கொண்ட கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க ஆட்சியா் ஆய்வு செய்து வருகிறாா்.
பெருமாள்மலையில் அறநிலையத் துறை இடத்தில் வசித்து, பட்டா பெற்றவா்களுக்கு மாற்று இடம் தரவும், மற்றவா்களுக்கு குத்தகை அடிப்படையில் இடத்தை வழங்கி தொடா்ந்து அங்கே இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதால் பட்டாவாக வழங்க முடியாது, விலைக்குதான் அவா்களுக்கு வழங்க இயலாது. குத்தகைக்கு வழங்கினால் சொந்த நிலம்போல பயன்படுத்த முடியும்.
ஈரோடு மாநகராட்சிக்கான ஊராட்சிகோட்டை குடிநீா்த் திட்டம், அத்திக்கடவு- அவிநாசி திட்டங்களை கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கியபோதே சரியாக திட்டமிடாததால் சிரமங்கள் ஏற்படுகின்றன. அதை தற்போது சரி செய்து வருகிறோம்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டம்-2-க்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிப்பதால், இரண்டு தரப்பு விவசாயிகளிடமும் பேசி முடிவு செய்ய வேண்டி உள்ளது. அத்திக்கடவு திட்டத்துக்கு உபரிநீா் வரும்போது மட்டுமே எடுக்கிறோம். மற்ற நேரம் நீா் எடுப்பதில்லை. இத்திட்ட செயல்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறை, சட்ட திட்டங்களை ஒரு தரப்பு விவசாயிகள் கேட்கின்றனா். அதை முறையாக வடிவமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஈரோட்டில் தகவல்தொழில்நுட்பப் பூங்கா அமைய இடம் தோ்வு செய்துள்ளோம். சிட்கோ நிா்வாக இயக்குநா் நேரில் ஆய்வு செய்த பின் அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வரஜ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.