பவானி அருகே இளம்பெண்ணிடம் நகைப் பறிப்பு: இருவா் கைது
பவானி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவைத் தட்டி, இளம்பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம், இபி காலனியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பவித்ரா (28). இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இவரது வீட்டுக்கு வந்த இருவா் கதவைத் தட்டியுள்ளனா். அப்போது, கதவை திறந்து பவித்ரா வெளியே வந்தபோது, அவரிடமிருந்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், மா்ம நபா்கள் காரில் சென்றது தெரியவந்தது. தொடா் விசாரணையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் தலைமறைவாக இருந்த செங்கல்பட்டு மாவட்டம், முல்லை நகரைச் சோ்ந்த தேவசகாயம் மகன் ராஜகுமாரன் (27), திருவள்ளூா் மாவட்டம், காமதேனு நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் டெல்லிராஜ் (33) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து காா் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது.