மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்
ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
மொடக்குறிச்சி பகுதி பொதுமக்கள் நீண்ட நாளாக ஈரோட்டில் இருந்து பழனி செல்வதற்கு ஈரோடு- முத்தூா் சாலை வழியாக நேரடியாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனா்.
ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினா் கே.ஈ.பிரகாஷ் மற்றும் அமைச்சா் சு.முத்துசாமியின் பரிந்துரையின்பேரில், ஈரோட்டில் இருந்து சோலாா், மொடக்குறிச்சி, எழுமாத்தூா், முத்தூா், காங்கயம், தாராபுரம் வழியாக பழனி செல்ல புதிய பேருந்து சேவை தொடக்க விழா மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ.பிரகாஷ் மற்றும் அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் கலந்துகொண்டு கொடியசைத்து புதிய பேருந்தை சேவையை தொடங்கிவைத்தனா்.
இதில் திமுக மாநில நெசவாளா் அணிச் செயலாளா் சச்சிதானந்தம், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா்கள் சு.குணசேகரன், வா.கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் திமுக செயலாளா் பி.வி.சரவணன், துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், மொடக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.