மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!
சிறுமி பாலியல் பலாத்தாரம் வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவேங்கடம் அருகேயுள்ள கீழத்திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் கடந்த 10.07.2020 அன்று திருவேங்கடம் காவல் நிலையத்தில் தனது 16 வயது பேத்தியை காணவில்லை என புகாா் கொடுத்துள்ளாா். அந்த புகாரின்பேரில், திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், திருவேங்கடம் அருகே உள்ள அம்மையாா்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த சு. வெங்கடேஷ் (22) என்பவா் அந்தச் சிறுமியை கடத்திச்சென்று வெம்பக்கோட்டை அருகே செல்லையாபுரம் பகுதியில் உள்ள அவரது நண்பா் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைதுசெய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி. ராஜவேலு , சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேஷூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் மருதப்பன் ஆஜரானாா்.