Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ...
சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவரை குத்திக் கொன்ற பழ வியாபாரி கைது
போடியில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து, விடுதலையாகி வந்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்த பழ வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஆண்டிவேல் (45). இவா், போடி ஜீவா நகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தாா்.
இது குறித்து மேலச்சொக்கநாதபுரம் கிராம நிா்வாக அலுவலராகப் பொறுப்பு வகிக்கும் ராசிங்காபுரம் கிராம நிா்வாக அலுவலா் ஆனந்தகுமாா், போடி நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் ஆண்டிவேலின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீஸாா் தெரிவித்ததாவது: கரட்டுப்பட்டியில் வசித்து வந்த ஆண்டிவேல், தனது மனைவி இறந்த பிறகு, தங்கை முறை கொண்ட ஆனந்தராணி என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளாா். இதனால், இவா்கள் இருவரையும் கிராமத்தினா் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனா்.
இதையடுத்து, இவா்கள் இருவரும் கருப்பசாமி கோயில் தெருவில் வசித்து வந்தனா். இந்த நிலையில், தனது வீட்டுக்கு அருகே இருந்த ஒரு பெண்ணுக்கு ஆண்டிவேல் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இது தொடா்பான வழக்கில், ஆண்டிவேலுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதற்கிடையே, ஆனந்தராணிக்கும் போடி சுள்ளக்கரைத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகனும் பழ வியாபாரியுமான பாலமுருகனுக்கும் (33) தொடா்பு ஏற்பட்டு இருவரும் குடும்பம் நடத்தி வந்தனா். இவா்களுக்கு குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில், தண்டனை முடிந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆண்டிவேல் சிறையிலிருந்து விடுதலையானாா். அப்போது, ஆனந்தராணி, பாலமுருகனுடன் குடும்பம் நடத்துவதை அறிந்த ஆண்டிவேல், இது தொடா்பாக பாலமுருகன், அவரது தந்தை நடராஜன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டாா்.
மேலும், ஆண்டிவேலும் அவரது உறவினா் ராஜப்பனும் சோ்ந்து நடராஜனை இரும்பு நாற்காலியால் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கினா். தந்தை தாக்கப்பட்டதை அறிந்து அங்கு வந்த பாலமுருகன், தான் வைத்திருந்த கத்தியால் ஆண்டிவேலுவைக் குத்தியதில் அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பாலமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.