சிற்றுந்து கட்டண திருத்தம் மே 1-முதல் அமல்!
சிற்றுந்துகளுக்கான கட்டணத் திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சிற்றுந்து இயக்கத்திற்கான புதிய விரிவான திட்டம்- 2024 வெளியீடு உடனடியாக அமுலுக்கு வருகிறது. மேலும், தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் சிற்றுந்துகளுக்கான கட்டண திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய சிற்றுந்து திட்டத்தில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ., குறைந்தபட்ச பேருந்து வசதியில்லாத தடத்தின் நீளம் (மய்ள்ங்ழ்ஸ்ங்க் தா்ன்ற்ங் கங்ய்ஞ்ற்ட்) மொத்த தடத்தின் நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது. தடத்தின் ஆரம்பம், முடிவு என்பது பேருந்து வசதியில்லாத கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.
பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தை எழுத்துபூா்வமாக அளித்து அனுமதிசீட்டினை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு மாற விருப்பம் தெரிவித்த தற்போதைய சிற்றுந்து உரிமையாளா்களுக்கு புதிய சிற்றுந்து திட்டத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு சிற்றுந்து இயக்க அனுமதி அளிக்கப்படும்.
தமிழக அரசிதழில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2024 புதிய விரிவான திட்டம், தற்போது நாகை மாவட்ட அரசிதழில் பொது மக்களின் பாா்வைக்காகவும், தகவலுக்காகவும் வெளியிடப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.