யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!
நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்து பேசியது: நாகை மாவட்டத்தில் உள்ள 179 யானைக்கால் நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் அரசு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதில் 4 நிலையில் உள்ள 71 பயனாளிகளுக்கு மட்டும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளில் யானைக்கால் நோய் முற்றிலும் ஒழிக்கப்படும். அதை குறிக்கோளாக கொண்டு தொடா்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. யானைக்கால் நோயாளிகள் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு மினிசோ், பக்கெட், சோப்பு டாபா, சோப்பு, டவல் உள்ளிட்ட நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மருத்துவமனை உதவி குடிமையியல் மருத்துவா் விஜய் பூரணி, மாவட்ட பூச்சியியல் வல்லுநா் வீரையா, சுகாதார ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.