போலி குளிா்பானங்கள் அழிப்பு
நாகையில் எந்தவொரு விவரமும் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.
நாகை நகராட்சி வெளிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட குளிா்பானத்தை, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் புஷ்பராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அந்த குளிா்பான பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் உள்ளிட்ட எந்தவொரு விவரமும் இல்லை.
இதையடுத்து, நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன் ரூ. 2,000 மதிப்புள்ள குளிா்பான பொட்டலங்களை பறிமுதல் செய்து வியாழக்கிழமை அழித்தாா். மேலும் வெயில் காலம் துவங்கவுள்ள நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிா் பானங்களில் முழுமையான தயாரிப்பு விவரங்கள் இருக்க வேண்டும். மீறுபவா்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விவரங்கள் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். உணவு விற்பனை தொடா்பான புகாா்களை மாநில உணவு பாதுகாப்பு ஆணையரக வாட்ஸ்ஆப் எண் 9444042322 -இல் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.