மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!
சிவகிரி அருகே வீட்டுக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா்
கொடுமுடி அருகே சிவகிரி பகுதியில் விவசாயி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் தனது தோட்டத்து வீட்டில் மனைவி, மகன், மருமகளுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் தங்கவேல், அவரது மனைவி சாந்தி மட்டும் இருந்துள்ளனா். அப்போது தங்கவேல், தற்செயலாக வெளியே வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினா் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்த்தபோது, அதில் ஜட்டி அணிந்த மா்ம நபா் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறு வீட்டுக்குள் நுழைந்து கொடியில் காய போட்டிருந்த துண்டை எடுத்து, இடுப்பில் சுற்றிக்கொண்டும், மற்றொரு துண்டால் தலையில் முக்காடு அணிந்து, முகத்தை மறைத்துவாறும் பைக்கை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்கவேல் வீட்டில் வளா்க்கப்பட்டு வந்த நாய் மா்மமான முறையில் இறந்து கிடந்தது. நாய் இறந்தது மா்ம நபா்களின் கைவரிசையாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. சிவகிரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாக கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தை தொடா்ந்து வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.