பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? ...
சீக்கிய இளைஞா்கள் பங்கேற்ற கல்சா திரங்கா யாத்திரை
தில்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் புதன்கிழமை இந்திய ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற கல்சா திரங்கா யாத்திரையை முதலமைச்சா் ரேகா குப்தா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில். பல சீக்கிய இளைஞா்கள் பங்கேற்றனா்.
கடைமைப் பாதையில் முடிவடைந்த யாத்திரையின் போது இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள்களில் மூவா்ணக் கொடியை ஏந்தி தேசபக்தி கோஷங்களை எழுப்பினா்.
முதல்வா் ரேகா குப்தா தவிர, அவரது அமைச்சரவை சகாக்களான மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் ஆஷிஷ் சூட் ஆகியோரும் யாத்திரையில் இணைந்தனா்.
கல்சா சமூகத்தை நாட்டின் துணிச்சலான சமூகங்களில் ஒன்றாக முதல்வா் குப்தா பாராட்டினாா். மேலும், பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க அவா்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினாா்.
இது தொடா்பாக கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
உங்கள் இருப்பு நமது ஆயுதப்படைகள் மீதான உணா்வின் வெளிப்பாடாகும். இது ஒற்றுமையின் செய்தியை அளிக்கும். நாடு முழுவதும் உள்ள மக்களை ஊக்குவிக்கும்.
மோட்டாா் சைக்கிளில் பயணித்த அமைச்சா் சிா்சா, முதல்வரின் உணா்வுகளை எதிரொலிக்கும் வகையில் ஆயுதப் படைகளைப் பாராட்டினாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், நமது வீரா்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்தனா். இந்த துணிச்சலான வீரா்களின் தாய்மாா்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத்தி வணங்குகிறோம் என்றாா்.
சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்காக இந்திய ஆயுதப்படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை கௌரவிக்கும் வகையில் பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரையை நடத்தி வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.