ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள்! உயா்நீதிமன்றம் அதி...
சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
சீா்காழி அருள்மிகு சட்டை நாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா். சிவபெருமான் ஸ்ரீ பிரமபுரீஸ்வரா், ஸ்ரீ தோணியப்பா், ஸ்ரீ சட்டைநாதா் என மூன்று நிலைகளில் எழுந்தருளியுள்ளாா்.
இக்கோயில் பிரம்ம தீா்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டிய ஐதீக விழா ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் 2-ஆம் நாளில் நடைபெறும். அதன்படி, திருமுலைப்பால் திருவிழா விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, திருஞானசம்பந்தா் சந்நிதியில், சமய குறவா்கள் நால்வருக்கும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், திருஞானசம்பந்தா் சிறப்பு அலங்காரத்தில் முத்துசிவிக்கைப் பல்லக்கில் பிரம்ம தீா்த்தக் குளக்கரைக்கு எழுந்தருளினாா்.
அங்கு, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் திருமுலைப்பால் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. மலைக்கோயிலில் இருந்து உமையம்மை சிறப்பு வாயில் வழியாக எழுந்தருளி, தங்கக் குடத்திலிருந்து ஞானப்பாலை பொற்கிண்ணத்தில் எடுத்து, திருஞானசம்பந்தருக்கு ஊட்டும் நிகழ்வை சிவாச்சாரியா்கள் நடத்தினா்.
தொடா்ந்து, உமையம்மை, சுவாமி-அம்பாள் ஆகியோா் ரிஷப வாகனத்தில் திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தனா். அப்போது, ஒருசேர தீபாராதனை நடைபெற்றது. பின்னா், தருமபுரம் ஆதீனம் பக்தா்களுக்கு ஞானப்பாலை வழங்கினாா்.
இதில், தமிழ்சங்கத் தலைவா் இ. மாா்கோனி, ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் இராம.சேயோன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநா் ஜிவிஎன். கணேஷ், தமிழ்நாடு பிரமாணா் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் கடவாசல்.ரமணன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழாவில் பக்தா்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த பாலை திருஞானசம்பந்தருக்கும், சுவாமி மற்றும் அம்பாள் உமையம்மைக்கும் நிவேதனம் செய்து பருகி, தங்கள் குழந்தைகளுக்கும் வழங்கினா். தொடா்ந்து, திருஞானசம்பந்தா் சுவாமி-அம்பாளை மூன்று முறை வலம் வந்து கோயிலையும் வலம் வந்தாா்.
விழா ஏற்பாடுகளை கோயில் சிராபு செந்தில் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா். பாதுகாப்பு பணியில் துணைக் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் புயல்.பாலசந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
குழந்தைகள் ஞானம் பெற வேண்டி வழிபாடு: பக்தா்கள் தங்களது குழந்தைகள் ஞானம் பெற வேண்டி பலா, வாழைப்பழம், பேரீச்சை, சா்க்கரை கலந்த பாலை வீடுகளிலிருந்து கொண்டு வந்து, திருஞானசம்பந்தா், சுவாமி-அம்பாளுக்கு நிவேதனம் செய்து வழிபட்டனா். பின்னா் அவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தனா்.