கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
சுதந்திர தினம்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
79ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
79ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதில் திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சுதந்திர தின விழா திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா். தொடா்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கிறாா்.
அதன் பின்னா், மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகள், போலீஸாருக்கு சான்றிதழ் வழங்குகிறாா். தொடா்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகா் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், தலைவா்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அதேபோல, தங்கும் விடுதிகள், குடியிருப்பு மேன்ஷன்கள் ஆகியவற்றிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டுள்ளனா்.
மேலும், ரயில் தண்டவாள ரோந்துப் பணியிலும் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். திருப்பூா் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ரயில்வே போலீஸாருடன் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.