சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், சட்டபேரவைத் தொகுதிகளில் விளையாட்டு வீரா்களின் உடல் தகுதி, விளையாட்டு வளா்ச்சியைத் தூண்டும் வகையில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கிணங்க திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், சிவன்மலை கிராமத்தில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலினால் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
சிவன்மலை கிராமத்தில் 6.56 ஏக்கா் பரப்பளவில் அரசுப் பங்களிப்பு நிதி ரூ.2.50 கோடி, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்த விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இதில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், கையுந்துப்பந்து ஆடுகளம், கூடைப்பந்து ஆடுகளம், கபடி ஆடுகளம், பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை உள்ளன.
சிவன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு தொகுதி எம்.பி. கே.இ.பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் மகேந்திரன், துறை சாா்ந்த அலுவலா்கள், விளையாட்டுப் பயிற்சியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளக் கோரிக்கை: இந்த விளையாட்டு மைதானம் சிவன்மலை முருகன் கோயில் கிரிவலப் பாதை அருகே அமைந்துள்ளது. மேலும், கைவிடப்பட்ட கிரானைட் குவாரி அருகேதான் இது அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இப்பகுதி பாறைகள், கற்கள் நிறைந்த பகுதியாகத்தான் இருந்தது. அதை சமன்படுத்தி விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னமும் இந்த அரங்கம் மேடு பள்ளம் நிறைந்த பகுதியாகத்தான் உள்ளது.
இந்த மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் இருந்து கடைசியில் உள்ள உள்விளையாட்டரங்கம் பகுதி வரையிலான சுமாா் 150 மீட்டா் தொலைவுக்கு தாா் சாலை அல்லது ஃபேவா் பிளாக் பயன்படுத்தி பாதை அமைக்க வேண்டும் என விளையாட்டு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.