ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கியிருக்க பைடனின் அரசியல் காரணமா... துணை வீரர் சென்னதென்ன?
நீண்ட நாள்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பாததற்கு அரசியலே காரணம் என்ற எலான் மஸ்க்கின் கருத்து சரியானது என்று வழிமொழிந்துள்ளார், விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் மற்றொரு வீரரான பேரி புட்ச் வில்மோர்.
விண்வெளி ஆர்பிட்டில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எலான் மஸ்க்கின் கருத்தை நம்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கோ உடன் இருக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கோ பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்படுவதற்கு பின்னால் உள்ள விவாதங்கள் பற்றி தெரியாது என்றும் ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்புக்காக தேர்தலில் பிரசாரம் செய்த பணக்காரர் எலான் மஸ்க், அதிபர் தேர்தலுக்கு முன்பு தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு நேர்மறையான விளம்பரம் வருவதைத் தவிர்க்கவே பைடன் நிர்வாகம் அவர்கள் வருகையை தாமதப்படுத்தியதாகக் கூறிவருகிறார்.
எலான் மஸ்க்கின் கருத்து விண்வெளி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தினாலும், அமெரிக்க அரசு மற்றும் நாசா சார்பில் மௌனம் காக்கப்பட்டு வந்தது.
அதிபர் தேர்தலுக்கு முன்பு பைடன் நிர்வாகம் சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவரும் திட்டத்தை தாமதப்படுத்தியபோது, எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அவர்களை மீட்டுக்கொண்டுவர தயார் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காக பைடன் அந்த திட்டத்தைக் குற்றம்சாட்டினார்.
இன்றுவரை கிட்டத்தட்ட 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துவரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமிக்குத் திரும்புவதை நாசா தாமதப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எலான் மஸ்க்குடன் ஒத்திசைவு
இந்த நிலையில், அவர்களது வருகை தாமதப்படுத்தப்படுவதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற மஸ்கின் வாதம் குறித்து செய்தியாளர்கள் வில்மோரிடம் கேள்வி எழுப்ப, அவர் ஆரம்பத்தில் மறுத்துவந்தார். பின்னர், "மிஸ்டர் மஸ்க் கூறுவது உண்மை என என்னால் கூற முடியும், நான் அவரை நம்புகிறேன்." என்று பதிலளித்துள்ளார்.

அத்துடன் மஸ்க் மற்றும் பைடன் அரசுக்கு இடையில் நடந்த விவாதங்கள் பற்றி தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளனர். "எங்களுக்கு அதுபற்றி எந்த தகவலும் இல்லை. என்ன சலுகை வழங்கப்பட்டது, என்ன வழங்கப்படவில்லை, யார் வழங்கியது, எப்படி விவாதிக்கப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் எங்களிடம் இல்லை" என்று கூறியுள்ளார்.
வில்மோரின் கருத்துகள் மீண்டும் 'அரசியல் காரணங்கள்' பற்றிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் பெரிதாக வளர்ந்தபோதிலும் மஸ்க் குற்றம்சாட்டும் அமெரிக்க அரசாங்கங்கள் மற்றும் நாசாவைச் சேர்ந்தவர்கள் அமைதிகாத்தே வருகின்றனர். தொழில்நுட்பக் காரணங்களுக்காகவே தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வருகிறது.
மஸ்க் கருத்தை எதிர்க்கும் Sunita Williams
அரசியல் தலையீடு குறித்த எலான் மஸ்க்கின் கருத்தை வில்மோர் ஏற்றுக்கொண்டாலும், 2030ம் ஆண்டுக்கு முன்னரே சர்வதேச விண்வெளி நிலையத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துக்கு இருவரும் எதிராக உள்ளனர்.
விரைவாக ISS-ஐ செயலிழக்கச் செய்து அதற்கான செலவில் செவ்வாய் கோளை ஆராயவேண்டும் என்ற கருத்தை எலான் மஸ்க் முன்வைத்து வருகிறார்.
ஆனால் சுனிதா வில்லியம்ஸ், "இந்த இடம் இன்னும் வேலை செய்து வருகிறது. இங்கு வந்து அறிவியல் எப்படி முன்னேறுகிறது என்பதைப் பார்த்து நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இப்போது நாம் நமது உச்சகட்டத்தில் இருக்கிறோம். இதைக் கைவிடுவதற்கு இது சரியான தருணம் இல்லை என நான் நினைக்கிறேன்." என்று பேசியுள்ளார்.

ட்ரம்ப் அரசு பதவியேற்று ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது தாமதத்துக்கும் நாசா சரியான காரணம் தெரிவிக்கவில்லை என்றாலும், ஸ்டார்லைனர் திட்டத்தை செயல்படுத்திய போயிங் நிறுவனம் பல தவறுகளை செய்துள்ளதால் எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவதற்கான அதன் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது.
நாசா போயிங், ஸ்பேஸ் எக்ஸ் என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றினாலும், ஸ்பேஸ் எக்ஸ் பல திட்டங்களை கச்சிதமாக செயல்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.