சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்: மின்னணு ஒப்பந்தப் புள்ளிகள் கோரல்
திருச்சி அருகேயுள்ள சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மின்னணு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
சூரியூரில் முதல்வரின் பெயரால் ரூ. 3 கோடியில் அமைக்கப்படும் மைதானமானது ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாகவும் கட்டப்படவுள்ளது.
இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மின்னணு வழியிலான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. முதல்வா் மினி விளையாட்டு அரங்கம்- ஜல்லிக்கட்டு அரங்கம் என்ற பெயரில் கோரப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் பிப். 4-ஆம் தேதி வரை ஒப்பந்தப் புள்ளிகள் வழங்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பிப். 5-ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளிகள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம், பணிகளை தொடங்கி 270 நாள்களுக்குள் கட்டுமானத்தை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.