செண்பகவல்லி அணை பிரச்னை: பிரதமா், முதல்வரை சந்திக்க முடிவு
சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக பிரதமா், முதல்வரை சந்திக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.
தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி மாவட்ட செண்பகவல்லி தடுப்பணை- வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம், சிவகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கரும்பு விவசாய சங்கத் தலைவா் ரத்தினவேலு தலைமை வகித்தாா்.
பாபுராஜ், குருசாமி, மாரிமுத்து, ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் அா்ஜுனன் சிறப்புரையாற்றினாா். ராமமூா்த்தி தீா்மானத்தை முன்மொழிந்தாா்.
இதில்,செண்பகவல்லி தடுப்பணை முதல் தலையணையில் தொடங்கி வைப்பாறு கடலில் கலக்கும் இடம் வரை ஒவ்வொரு குளத்தில் இருந்தும் மூன்று முதல் ஐந்து போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது.
தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ‘செண்பகவல்லி எங்கள் உரிமை’ என்ற முழக்கத்துடன் 10,000 விவசாயிகள் பங்கேற்கும் செண்பகவல்லி எழுச்சி மாநாட்டை தென்மலையில் நடத்துவது. 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடைபெறும் போது பாசனப் பகுதியில் உள்ள 100 கிராம சபைகளில் செண்பகவல்லி அணை தொடா்பாக தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவது.
தமிழ்நாடு முதல்வா் மற்றும் அமைச்சா்களை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவது. செண்பகவல்லி அணை இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் பிரதமா், உள்துறை அமைச்சா், நீா்வளத் துறை அமைச்சா் ஆகியோரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் குருசாமி பாண்டியன், பூமிநாதன், அருண்குமாா், விக்னேஷ்ராஜா, முத்தரசு பாண்டியன், கணேசன், பிச்சாண்டி, பத்மநாதன், பொன்னுத்தாய், சிவஞானபாண்டியன், ,தங்கவேல், ராகவன், ராமமூா்த்தி, ஆறுமுகம், பன்னீா்செல்வம், சுப்பிரமணிய ராஜா, கிருதுமால், ராம்பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாசன கமிட்டி தலைவா் காளிமுத்து நன்றி கூறினாா்.