சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?
மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக்கிறார். அப்போது பைக் கால்டாக்ஸி டிரைவர் ஜோ ரிச்சர்ட் என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இளம்பெண்ணும் ஜோரிச்சர்ட்டும் நண்பர்களாக பழகி வந்திருக்கிறார்கள். அதனால் இருவரும் போனிலும் பேசி வந்திருக்கிறார்கள்.

போலி வீடியோ
இந்தச் சமயத்தில் ஜோ ரிச்சர்ட், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறியதோடு அவரோடு தனிமையில் இருக்கவும் விரும்பியிருக்கிறார். அதற்கு அந்த இளம்பெண், மறுத்ததோடு ஜோ ரிச்சரட்டோடு பேசுவதையும் தவிர்த்திருக்கிறார். இந்தச் சூழலில் இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வீடியோ ஒன்று வந்திருக்கிறது. அந்த வீடியோவில் இளம்பெண்ணும் ஜோ ரிச்சர்ட்டும் தனிமையிலிருக்கும் காட்சி இருந்தது. அதைப்பார்த்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். அந்த வீடியோ ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக தயாரித்ததை இளம்பெண் உணர்ந்தார்.
கைது
இதையடுத்து இளம்பெண் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆபாச வீடியோ தொடர்பாக புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் மேற்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் புகாரளித்த இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி அந்த வீடியோவை ஆய்வுக்குட்படுத்தியபோது அது போலி எனத் தெரியவந்தது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம்பெண்ணின் ஆபாச வீடியோ தயாரித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பைக் கால் டாக்ஸி டிரைவர் ஜோ ரிச்சர்டை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இளம்பெண்ணுடன் கடந்த 8 மாதங்களாக பழகி வந்த ஜோ ரிச்சர்ட் அவரை காதலித்திருக்கிறார். ஆனால் அந்தக் காதல் கைக்கூடவில்லை. அதனால் இளம்பெண்ணை பழிவாங்க திட்டமிட்ட ஜோ ரிச்சர்ட், இளம்பெண்ணுடன் பழகியபோது அவரோடு எடுத்த போட்டோஸ்கள், வீடியோக்களைப் பயன்படுத்தி ஆபாச வீடியோவை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு தயாரித்திருக்கிறார்.
பின்னர், அந்த வீடியோவை வேறு ஒருவர் அனுப்புவதைப் போல இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அனுப்பி அவரை மிரட்டியது தெரியவந்தது. அதனால் ஜோ ரிச்சர்ட்டை கைது செய்தோடு அவரிடமிருந்து செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோ ரிச்சர்ட் சிறையில் அடைக்கப்பட்டார்.