ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
சென்னை: பெட்டிக்கடை பெண்ணிடம் செயின் பறிப்பு; கைவரிசை காட்டிய தம்பதியை மடக்கிப் பிடித்த மக்கள்!
சென்னை கே.கே.நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரின் மனைவி காந்தா (52). இவர்கள் மணப்பாக்கம், பார்த்தசாரதி நகரில் காய்கறி, கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேதி மதியம், கடையில் காந்தா தனியாக இருந்தார். அப்போது கடையின் முன்பு பைக்கை நிறுத்திய ஆண், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூல்டிரிங்க்ஸ் வாங்கிவருமாறு கூறியிருக்கிறார். உடனே அந்தப் பெண்ணும் பைக்கை விட்டு கீழே இறங்கி காந்தாவிடம் கூல்டிரிங்க்ஸ் கேட்டிருக்கிறார். அதனால், கூல்டிரிங்க்ஸை காந்தா கொடுக்க அதை வாங்குவதைப் போல கையை நீட்டிய அந்தப் பெண், மின்னல் வேகத்தில் காந்தா அணிந்திருந்த தங்கச் செயினைப் பறித்தார். பின்னர் பைக்கில் தயாராக நின்றுக் கொண்டிருந்த ஆணோடு தப்பிச் செல்ல முயன்றார்.

அதனால் அதிர்ச்சியடைந்த காந்தா, திருடி திருடி என சத்தம் போட்டார். உடனே அந்தப் பகுதியிலிருந்தவர்கள் பைக்கை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இருவரிடமும் போலீஸார் விசாரித்தபோது செயினைப் பறித்த பெண்ணின் பெயர் ஆயிஷா பேகம் (30), சென்னை மணப்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. செயின் பறிப்பின் போது ஆயிஷா பேகத்துடன் வந்தவர் அவரின் கணவர் ஜானி (35) என விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு கணவன், மனைவியை செயின்பறிப்பு வழக்கில் கைது செய்த போலீஸார் தங்கச் செயினையும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.