BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண்மீது பெட்ரோல் ஊற்றிய உணவு டெலிவரி பாய் - நண்பனுடன் கைது!
சென்னை யானைகவுனி பகுதியில் 19 வயதாகும் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் குடியிருக்கும் அர்ஜூன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்துள்ளனர். இந்த நிலையில் அர்ஜூனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகியிருக்கிறார் இளம்பெண். ஆனால் இளம்பெண்ணை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்திருக்கிறார் அர்ஜூன். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி வேலை முடிந்து அந்த இளம்பெண், வால்டாக்ஸ் ரோடு, கல்யாணபுரம் பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகே தனியாக நடந்து சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த அர்ஜூன், அவரின் நண்பன் ஜேம்ஸ் ஆகியோர் இளம்பெண்ணை வழிமறித்திருக்கிறார்கள்.
பின்னர் இளம்பெண்ணிடம் என்னிடம் நீ ஏன் பேசுவதில்லை என அர்ஜூன் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு இளம்பெண்ணும் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று பதிலளித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அர்ஜூன், கேனில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து இளம்பெண் மீது ஊற்றியிருக்கிறார். அதனால் இளம்பெண் அதிர்ச்சியடைந்ததோடு சத்தம் போட்டிருக்கிறார். உடனே அவ்வழியாக சென்றவர்கள் இளம்பெண்ணிடம் என்னவென்று விசாரித்ததும் பயந்து போன அர்ஜூன் அவரின் நண்பன் ஜேம்ஸ் ஆகியோர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து இளம்பெண், யானைகவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு யானைகவுனியைச் சேர்ந்த அர்ஜூன் (20), அவரின் நண்பன் ஜேம்ஸ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான அர்ஜூன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.