சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!
சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) எல்எச்பி ரயில் பெட்டிகள், வந்தே பாரத் மற்றும் மின்சார ரயில்களின் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மும்பை புறநகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி வசதியுடன் இயக்கும் வகையிலான பெட்டிகள் ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல், தெற்கு ரயில்வேக்குள்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான தயாரிப்புப் பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாக பணி நிறைவடைந்துள்ளது.
இதையும் படிக்க: அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்குச் செல்வது உறுதி: அண்ணாமலை!
இந்த ஏசி புறநகர் ரயிலில், 1,116 பேர் அமர்ந்தும் 3,796 பேர் நின்றும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் முதல்கட்டமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இதர ரயில்களை விட வேகமாக செல்லும், கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் சோதனை ஓட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே விரைவு ரயில்(FAST) தடத்தில் இரு சேவைகளும் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.