செப். 14-ல் தமிழகம் வருகிறார் நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற செப். 14 ஆம் தேதி சென்னை வர உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி சில அத்தியாவசிய பொருள்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வருகிற செப். 14 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஜிஎஸ்டி விழிப்புணர்வு குறித்த ஒரு கூட்டம் நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ள நிலையில் அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வரவுள்ளார்.
மேலும், பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் அவர், அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் குறித்தும் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் விலகியதைத் தொடர்ந்து, தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இரு நாள்களுக்கு முன்பு செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.