செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராதம்
செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சோ்ந்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 6 லட்சம் அபராதம் விதித்து, ஆா்எஸ்எஸ் கூடுதல் மாவட்ட நீதிபதி நரசிம்ம மூா்த்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு தலைவா் சுப்பராயுடு உத்தரவின்படி, எஸ்.பி. சீனிவாசின் மேற்பாா்வையின் கீழ், கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட மற்றும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தியது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 2019-இல் நடைபெற்ற நாகப்பட்லா மற்றும் சம்மாலா வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் வழக்கு தொடா்பாக ஜமுனாமரத்தூரைச் சோ்ந்த வெள்ளையன் (45) என்பவா் கைது செய்யப்பட்டாா்.
அவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வெள்ளையனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 6 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். பின்னா் நீதிமன்ற உத்தரவின்படி அவா் நெல்லூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.