ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: 58 போ் வேட்புமனு தாக்கல்
செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு இளம் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற 18 வயதே ஆன இளம் வீரர், தமிழகத்தைச் சோ்ந்த டி.குகேஷுக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதாக இருக்கும் ‘தியான்சந்த் கேல் ரத்னா விருதினை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
தமிழக வீரர் குகேஷுடன், தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகியோரும் அா்ஜுனா விருது பெற்றுள்ளனர்.
விளையாட்டுத் துறையில் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியவா்கள், துறை சாா்ந்து சிறப்பாகச் செயல்படுபவா்களுக்கு ஆண்டுதோறும் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான (2024) விருது வென்றவா்கள் பட்டியலை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று விருது வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விருது வழங்கும் விழாவில், இளம் உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்த தமிழ்நாட்டைச் சோ்ந்த டி.குகேஷுக்கு ‘தியான் சந்த் கேல் ரத்னா விருது’ வழங்கப்பட்டது.
மேலும், ஹாக்கி ஆண்கள் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கௌர், பாரா தடகள வீரர் பிரவீன் குமார், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோரும் இன்று கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
துளசிமதி (22), நித்யஸ்ரீ (19), மனிஷா (19) ஆகிய பாரா பாட்மின்டன் போட்டியாளா்களுக்கு அா்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலின்படி, குகேஷ் உள்பட 4 பேருக்கு தியான் சந்த் கேல் ரத்னா விருதும், துளசிமதி உள்பட 32 பேருக்கு அா்ஜுனா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வெல்ல, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சோ்த்தனா். இவா்கள் மூவரும் உலக மற்றும் ஆசிய அளவிலான பாரா போட்டிகளிலும் பதக்கம் வென்று சாதனை படைத்தவா்களாவா்.