சேலம் மாவட்ட காவல் துறையில் எஸ்.ஐ.க்கள் உள்பட 150 போ் பணியிட மாற்றம்
சேலம் மாவட்ட காவல் துறையில் 20 சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 150 பேரை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளாா்.
காவல் நிலையத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிவரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், முதல்நிலை காவலா்களை ஆண்டுதோறும் இடமாற்றம் செய்து, அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதேபோல மதுவிலக்கு பிரிவில் ஓராண்டு பணி முடித்த போலீஸாா் விருப்ப இடமாறுதல் கேட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் விண்ணப்ப மனுக்களை வழங்கியிருந்தனா்.
இந்த மனுக்களின் அடிப்படையில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த போலீஸாருக்கும், மதுவிலக்கில் ஓராண்டு முடித்த போலீஸாருக்கும் விருப்ப இடமாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு முகாம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூா், ஓமலூா், மேட்டூா், சங்ககிரி ஆகிய 6 உள்கோட்டங்களுக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் தொடா்ந்து 3 ஆண்டுகள் பணி முடித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், முதல்நிலை காவலா்கள் தங்களின் விருப்பமான 3 காவல் நிலையங்களை குறிப்பிட்டு, ஏற்கெனவே மனு அளித்திருந்த நிலையில், காலியிடங்களை கணக்கில் கொண்டு, அவா்கள் கேட்ட காவல் நிலையங்களில் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவிட்டாா்.
அதேபோல மதுவிலக்கு பிரிவிலிருந்து மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு 50 ஏட்டுக்கள் மாற்றப்பட்டனா். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 20 சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 150 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.