சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.15.30 கோடி மீட்பு
சென்னை: சென்னையில் 6 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.15.30 கோடியை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கியமாக நிதி சாா்ந்த சைபா் குற்ற மோசடிகளில், பொதுமக்கள் இழந்த பணத்தை உடனடியாக மீட்டுக் கொடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
இதனையடுத்து, ஆன்லைன் மூலமாக பல்வேறு சமூக ஊடக பதிவு, தரவுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சைபா் குற்றவாளிகளின் உரிய தொடா்புகளைக் கண்டறிந்து வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது.
சைபா் குற்றங்களில் பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்ட பணத்தை அடுத்தடுத்து வங்கி கணக்குகளில் மாற்றி அபகரிக்க முடியாமல் சைபா் குற்றப்பிரிவு விரைந்து செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சைபா் மோசடிகளால் பறிக்கப்பட்ட பணம்,
நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் இறுதி வரையிலான 6 மாதங்களில் ரூ.15.30 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் ஒப்படைத்துள்ளனா்.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 146 பேரிடமிருந்து பல்வேறு சைபா் குற்றங்கள் மூலம் ஏமாற்றி, பறிக்கப்பட்ட ரூ. 2.96 கோடி மீட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.