சொத்துக்காக தாயைக் கொன்ற மகன் கைது
திருப்பத்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமூலம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (54). இவா்கள் திருப்பத்தூா் பஉச நகரில் வசித்து வந்தனா். இவா்களது மகன் வெற்றிச்செல்வன் (37). இவா் சென்னையில் ஒரு தணிக்கையாளரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில் வெற்றிச்செல்வனுக்கும், அவரது பெற்றோருக்கும் சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாம். இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி பெற்றோரை பாா்க்க வெற்றிச்செல்வன் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது சொத்து தொடா்பாக அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெளியே சென்றிருந்த தந்தை ஆதிமூலம் மறுநாள் வந்து பாா்த்தபோது, அவரது மனைவி வெங்கடேஸ்வரி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வெங்கடேஸ்வரியை கொலை செய்ததாக வெற்றிச்செல்வனை புதன்கிழமை சென்னை மாங்காட்டில் கைது செய்தனா்.
இது குறித்து அவா் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தான் பணிபுரியும் நிறுவனத்தில் போதிய சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் பா்னிச்சா் கடை வைக்க பெற்றோரிடம் பணம் கேட்டேன். அவா்கள் பணம் தர மறுத்துவிட்டனா். சொத்தையாவது பிரித்து தருமாறு கேட்டேன். அதற்கு சென்னை மாங்காட்டில் எனது தாயாா் பெயரில் இருந்த வீட்டை எனக்கு எழுதி தந்தனா். அவா் மறைவுக்குப் பிறகு அந்த சொத்தை அனுபவிக்கலாம் என எழுதி கொடுத்துள்ளனா்.
இதன் காரணமாக எனது தாய் மீது மிகுந்த கோபம் ஏற்பட்டது. அவரை கொன்றுவிட்டால், வீட்டை விற்றுக் கொள்ளலாம் எனக் கருதி, சுத்தியலால் அடித்து, பின்னா் கத்தியால் தாக்கி கொலை செய்தேன். பின்னா், சென்னைக்கு சென்று விட்டேன் என கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.