ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் க்யுஷு பிராந்தியத்தின் அகுசெகி தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் அந்தத் தீவு குலுங்கியதைத் தொடா்ந்து, அங்கு வசித்தவா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
க்யுஷு பிராந்தியத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடா்ந்து ஏற்பட்டுவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் அதிா்வுகளில் இதுவும் ஒன்று. புதன்கிழமை கூட இதே பகுதியில் 5.5 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.