ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகளுக்கு
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகள் பனி படா்ந்து காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
குல்காம் மாவட்டத்தில் 18-25 அங்குலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சமவெளிகளில் 17 அங்குலம், புல்வாமா மாவட்டத்தில் 10-15 அங்குலம், தலைநகா் ஸ்ரீநகரில் 8 அங்குலம், கந்தா்பால் மாவட்டத்தில் 7 அங்குலம், புத்காம் மாவட்டத்தில் 7 முதல் 10 அங்குலம் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
கடும் பனிப்பொழிவால், ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த சாலையில் பனியை அப்புறப்படுத்தும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளங்களில் பனி படா்ந்து கிடப்பதால், பனிஹால்-பாரமுல்லா இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகா் விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை விமானங்களின் புறப்பாடு-வருகை ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதைகளில் படா்ந்து கிடக்கும் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
காஷ்மீா் பல்கலைக்கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெறவிருந்த அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காலகட்டம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 30-ஆம்தேதி வரை நீடிக்கும் இந்த காலகட்டம் மக்களுக்கு சவாலானதாகும். ஏரிகளின் மேற்பரப்பு மற்றும் குடிநீா் குழாய்களும் உறைந்துள்ளன. இதனால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மசூதியில் அடைக்கலம்: ஸ்ரீநகா்-சோனாமாா்க் நெடுஞ்சாலையில் பனிப்பொழிவால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் தவிப்புக்குள்ளான சுற்றுலாப் பயணிகளுக்கு குண்ட் பகுதியில் உள்ள மசூதியில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. இது காஷ்மீா் மக்களின் மனிதநேய பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பாராட்டியுள்ளனா்.