ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!
ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சஸோட்டி கிராமத்தில், இன்று (ஆக.14) மதியம் 12 மணியளவில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிஷ்த்வாரில், மலை மீது இருக்கும் மசாயில் மாதா கோயிலுக்கு, செல்லும் வழியில் அமைந்துள்ள கடைசி கிராமம் சஸோட்டி. அங்கிருந்து சுமார் 8.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்த ஏராளமான வீடுகள் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி 33 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், 2 சிஐஎஸ்எஃப் வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், செஞ்சிலுவை இயக்கம் உள்ளிட்ட ஏராளமான மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சிக்கியுள்ள 200 க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய சுமார் 20 நாள்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.