அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறு...
ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ராமதாஸ் சோரன்(62) உடல்நலக் குறைவால் தில்லியில் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனை முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஜார்கண்ட் பள்ளிக் கல்வி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ராம்தாஸ் சோரன், சமீபத்தில் அவரது வீட்டில் குளியலறையில் விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், ஆனால் உயர் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து சிறப்பு ஏற்பாடுகள் மூலம் ஜாம்ஷெட்பூர் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் தில்லி கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
அவரது மறைவை அவரது மகன் சோமேஷ் சோரன் மற்றும் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தினர்.
ராம்தாஸ் சோரனின் உடல் சனிக்கிழமை காலை ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு 9 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் வைக்கப்படும். அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
கத்சிலா தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராம்தாஸ் சோரன் எளிமை மற்றும் மக்களின் சேவைகளுக்காக அறியப்பட்டவர்.
1980 இல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ராம்தாஸ் சோரன், கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர்.