ஜி20 மாநாடு தொடக்கம்: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி!
பிரேசிலில் ஜி20 மாநாடு இன்று(wava. 18) தொடங்கியுள்ளது. 2 நாள்கள் நடைபெறும் மாநாட்டில், ஜி20 அமைப்பைச் சேர்ந்த இந்தியா, கனடா, அமெரிக்கா, சீனா, ரஷியா, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கின்றன. இதையொட்டி, மேற்கண்ட நாடுகளின் தலைவர்கள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனேரோ நகருக்கு வருகை தந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்ற சில வாரங்களிலேயே நடைபெறும் ஜி20 மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், காஸா, மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர்ப்பதற்றம், உக்ரைனில் 2 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நீடிக்கும் சண்டை ஆகிய சர்வதேச விவகாரங்கள் இந்த மாநாட்டில் கவனம் பெறுகின்றன.
ஜி20 மாநாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் அங்கு வருகை தந்திருந்த உலகத் தலைவர்களும் உற்சாகமாக சந்தித்து உரையாடிக் கொண்டனர். இதனை பல்வேறு பதிவுகளாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.