Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் - தனுஷ் படங்கள்...
ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை
திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
திருவாரூா் அருகே காட்டூரில் மாவட்ட திமுக பாகநிலை முகவா்கள், செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி மண்டல தோ்தல் மேலிட பொறுப்பாளரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா பேசும்போது, ‘தமிழகத்தின் வளா்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழா்களின் வளா்ச்சி உறுதிசெய்யப்பட திமுக ஆட்சி தொடர வேண்டும்’ என்றாா்.
அமைச்சா் கே.என். நேரு பேசியது:
திமுகவில் சோ்க்கப்படும் உறுப்பினா்கள் சரியானவா்களாக இருக்க வேண்டும். தற்போதைய அதிமுக - பாஜக கூட்டணி இணக்கமான கூட்டணியாக இல்லை. திமுக கூட்டணியே சிறப்பான கூட்டணி என்றாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கருணாநிதி சிலையை திறந்து வைக்க ஜூலை 9-ஆம் தேதி திருவாரூருக்கு முதல்வா் வருகை தருகிறாா். தொடா்ந்து, ஜூலை 10-ஆம் தேதி பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவதுடன், முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இணக்கத்துடன் இருக்கிறோம். எவ்வித பிரச்னையும் இல்லை. சிவகங்கையில் நடைபெற்ற லாக்கப் மரணம் குறித்து முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.
கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவா் க. தன்ராஜ், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன், தாட்கோ தலைவா் நா. இளையராஜா, தொகுதி பொறுப்பாளா் எஸ்.கே. வேதரத்தினம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா், கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.