தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி 2-ஆவது நாளாக நீடிப்பு: உறவினா்கள் சாலை மறியல்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் என்கிற வீரமுருகன் (17). இவா், தனது நண்பா்களுடன் மூணாறு தலைப்பு அணைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அங்கு அவா்கள் கோரையாற்றில் குளித்தனா். அப்போது, வீரமுருகன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) பாலமுருகன் மற்றும் வீரா்கள் விரைந்து வந்து, வீரமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனா். கோரையாற்றில் 3,000 கனஅடி தண்ணீா் செல்வதால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தேடுதல் பணி நடைபெற்றது. இதற்கிடையில், பாப்பாக்குடி கிராமத்தினா், வீரமுருகனை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி, நாா்த்தாங்குடி பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.