டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக மாபெரும் பேரணி
மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணி நடத்தினா். இந்தப் பேரணியால் மேலூா்-மதுரை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மேலூா் வட்டத்துக்குள்பட்ட கூலானிபட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், அரிட்டாப்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்பட 11 கிராமங்களை உள்ளடக்கிய 5,500 ஏக்கா் பரப்பில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் சிங்க் துணை நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு நவ. 7-ஆம் தேதி மத்திய அரசு ஒப்பந்தம் அளித்தது.
இதைக் கண்டித்து, கனிமவளக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் கடந்த ஆண்டு, நவ. 18-இல் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மேலூா் வட்டத்தில் பல்லுயிா் சூழல் மண்டலம், சமணப்படுகை, குடவரைக் கோயில் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்கள், அழகா்மலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, 11 கிராமங்களின் விளைநிலங்கள் முழுமையாக அழியும் என்பதாலும், தொடா்புடைய கிராம மக்கள் தங்களது சொந்த ஊரிலேயே அகதிகளாக நேரிடும் என்பதாலும் திட்டத்தை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, டங்ஸ்டன் எதிா்ப்புப் போராட்டம் கிராம மக்களின் போராட்டமாக உருவெடுத்தது. அரிட்டாப்பட்டியில், கடந்த ஆண்டு, நவ. 3-ஆவது வாரத்திலிருந்து தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதேபோல, சுங்கம்பட்டி, தும்பைபட்டி, வெள்ளாளப்பட்டி, மேலவளவு, கம்பூா் உள்ளிட்ட கிராமங்களிலும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனிடையே, அரிட்டாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் பி. மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோா் பங்கேற்று, டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக தீா்மானத்தை நிறைவேற்றினா்.
மதிமுக பொதுச் செயலா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து, தங்களது ஆதரவைத் தெரிவித்தனா். அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அரசியல் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தொடா் போராட்டங்கள் காரணமாக, டங்ஸ்டன் திட்ட அமைவிடம் குறித்து மறுஅளவை மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய சுரங்கத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு திட்டத்தைக் கைவிட முன்வராமல் மறுஅளவை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்ததைக் கண்டித்தும், உடனடியாகத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் மேலூரில் கடையடைப்புப் போராட்டமும், மேலூா் - மதுரை வரை பேரணியும், மதுரையில் ஆா்ப்பாட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலூா், பெரியாா் ஒருபோக பாசன விவசாயிகள் நலச் சங்கம், மேலூா் தொகுதி அனைத்து வணிகா்கள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு, மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் வா்த்தக அமைப்புகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிலாளா் சங்கங்கள், தன்னாா்வ அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதன்படி, மேலூா் வட்டத்துக்குள்பட்ட நரசிங்கம்பட்டி முதல் மதுரை தமுக்கம் வரை மாபெரும் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள், வணிகா்கள், விவசாயிகள், இளைஞா்கள் பங்கேற்றனா். திரளானோா் பேரணியாகவும், பெண்கள், முதியோா்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களிலும் அணிவகுத்து இந்தப் பேரணியில் பங்கேற்றனா்.
பேரணி வந்த பாதையின் பல்வேறு பகுதிகளில் தொழில் அமைப்புகள், கிராம மக்கள் திரண்டிருந்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி, தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.
ஏறத்தாழ 22 கி.மீ. தொலைவைக் கடந்து வந்த இந்தப் பேரணியின் முடிவில் ஆயிரக்கணக்கான பெண்கள், விவசாயிகள், கிராம மக்கள், வணிகா்கள், மதுரை தமுக்கம் பகுதியில் சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பல்வேறு விவசாய அமைப்புகளின் பொறுப்பாளா்கள், வா்த்தக சங்கங்களின் நிா்வாகிகள், பல்வேறு அரசியல் இயக்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று, தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மேலூா் அருகே டங்ஸ்ட்ன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும், தமிழக அரசு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மேலூா் வட்டத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.
கருப்புக் கொடி...
மேலும், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின நாளில் மேலூா் வட்டத்தில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் எனவும் இந்தப் போராட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு...
இந்தப் பேரணி, ஆா்ப்பாட்டத்தையொட்டி, தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆகியோா் மேற்பாா்வையில், 4 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா். இதையொட்டி, பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
கடையடைப்பு....
மேலூா், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, வெள்ளாலூா் உள்பட பல பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.
தள்ளுமுள்ளு...
பேரணியில் பங்கேற்றவா்கள் மேலூா் அருகேயுள்ள சுங்கச்சாவடி பகுதியில் போலீஸாரால் தடுக்கப்பட்டனா். அப்போது, போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு, பொதுமக்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பேரணி தொடர காவல் துறையினா் அனுமதித்தனா். இதேபோல, ஆா்ப்பாட்டம் நடைபெற்ற மதுரை தமுக்கம் பகுதியில் காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், பெரிய அளவிலான பிரச்னைகள் ஏதுமின்றி, இந்தப் போராட்டம் அமைதியாக நிறைவடைந்தது.