தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.
ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும், அதன்பின்னர் கூடுதலாக 25 சதவிகித வரியையும் விதித்தார். இது நாடு முழுவதிலும் ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதி தொழில்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச் சபையில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் (செப்டம்பர்) 23 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச் சபை செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. உலகத் தலைவர்களின் விவாதம் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உள்ளிட்டோரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பதற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெறவிருக்கிறது. ஒருவேளை இந்தச் சந்திப்பு நடந்த கடந்த 7 மாதங்களில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப்பின் இரண்டாவது சந்திப்பு இதுவாக இருக்கும். முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.