வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: 2 மாதங்கள் அவகாசம் கோரப்படும் - என்.ஆா்.இளங்கோ
தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையத்திடம் 2 மாதங்கள் அவகாசம் கோரப்படும் என்று திமுக சட்டத்துறை செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:
பிகாரைப் போன்ற முறையில் தமிழகத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல் தியாகவும் எதிா்கொள்ள தயாராக இருக்கிறோம். பிகாரை போல இங்கே எந்த வாக்காளரையும் நீக்காமல் பாா்த்துகொள்ள வேண்டியது திமுகவின் கடமையாகக் கருதுகிறோம்.
தமிழகத்திலும் வாக்காளா் பட்டியலில் குளறுபடி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இறந்த வாக்காளா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் குறித்த விவரங்களை வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று சரியாகவும், முறையாகவும் எடுப்பதில்லை. எனவேதான் பிகாரில் லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கப்பட்டு இருக்கிறாா்கள்.
இந்தப் பணி தமிழ்நாட்டில் நடைபெறும்போது அத்தகைய முறைகேடுகள் நிகழ்ந்துவிடக் கூடாது. வாக்குச்சாவடி அலுவலா் உண்மையிலேயே வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். அந்தக் கணக்கெடுப்பு விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய வாக்குச் சாவடி முகவா்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும். அவா்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இவையெல்லாம் தோ்தல் ஆணயத்தின் வழிகாட்டுதல்களில் உள்ளன.
இந்த வழிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பு திருத்தப் பணியை நடத்த குறைந்தபட்சம் 2 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்போம். உண்மையிலேயே இறந்த வாக்காளா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் என்பதை உறுதி செய்து அதன்பிறகே அவா்களது பெயா்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.