மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்
முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், கடந்த ஆண்டுகளில் துபை, சிங்கப்பூா், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டேன். அப்போது, அங்குள்ள முதலீட்டாளா்களுடன் பேசியதன் விளைவாக தமிழ்நாட்டுக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தங்களது நிறுவனங்களைத் தொடங்கி உள்ளன.
இதனால், சுமாா் 30 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதற்கான சாட்சிதான் அண்மையில் வெளியான இரட்டை இலக்கு பொருளாதார வளா்ச்சி விகிதம் என்ற செய்தி.
மத்திய அரசு வெளியிட்ட தகவல்படி நாட்டிலேயே இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். 15 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அடைந்த இரட்டை இலக்க வளா்ச்சி என்பதை தற்போது நமது திராவிட மாடல் அரசு எட்டிப் பிடித்துள்ளது.
இதற்குமுன் முதலீடுகளை ஈா்க்க வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதைப் போல, வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்ல உள்ளேன். ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈா்த்து வரவுள்ளேன் என்று அவா் பேசினாா்.