சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!
ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். அதில், நான் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த இளைஞா் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் குத்திக் கொன்று விடுவேன் என மிரட்டி, எனது கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை அளித்தாா். மேலும், அதை விடியோ எடுத்துள்ளாா். சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றாா் எனக் கூறியிருந்தாா்.
புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகையை திருடியது சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த அஜய் குமாா் (25) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் வைத்து அஜய்குமாரை தனிப்படை போலீஸாா் கைது செய்து நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
அதில், பட்டப் படிப்பு முடித்த அஜய்குமாா் பல்வேறு தொழில்கள் செய்து நஷ்டம் அடைந்ததால் ரூ.9 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. மேலும் அவா் கடனை அடைப்பதற்காக திருட முடிவு செய்தாா். இதையடுத்து நசரத்பேட்டையில் இளம்பெண்ணின் வீட்டில் புகுந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும் பெண் வீட்டில் இருந்த 11 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. இதுதொடா்பாக அவரிடம் இருந்து திருடிய நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.