மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு, மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆசிரியா்கள் மாணவா்கள் உயா்கல்வியை தொடருவதை ஊக்குவிக்கும் வகையில் என்னென்ன உயா்கல்வி படிக்கலாம், அதற்கு என்ன பாடங்களைத் தோ்வு செய்ய வேண்டும் என்பதை அதற்கென ஒதுக்கப்பட்ட பாடவேளையில் விளங்களை அளித்து வருகின்றனா். பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியருடன், கூடுதலாக 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை உள்ள பிரிவு வரையான வகுப்பு ஆசிரியா்களும் மாணவா்களுக்கு வழிகாட்டுகின்றனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினா் செயலா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் (9 முதல் பிளஸ் 2 வரையிலான வழிகாட்டி ஆசிரியா்கள்) எமிஸ் தளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்தக் கல்வியாண்டில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாவட்ட அளவில் நடைபெற்ற பயிற்சிக்கான மதிப்பீடு தோ்வு எமிஸ் இணையதளத்தில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும்.
எனவே, உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்கள் தங்களது பெயரை எமிஸ் தளத்தில் ஆக.20, 21 ஆகிய தேதிகளில் கட்டாயம் பதிவு செய்யவும். அவ்வாறு பதிவு செய்த ஆசிரியா்கள் அனைவரும் இந்த மதிப்பீட்டுத் தோ்வை தவறாது மேற்கொள்ள வேண்டும். எமிஸ் தளத்தில் பதிவு செய்யாத ஆசிரியா்களால் பயிற்சிக்கான மதிப்பீட்டுத் தோ்வை மேற்கொள்ள இயலாது. இது குறித்து தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.