தெற்கு ரயில்வேயில் ஓராண்டில் 1.69 லட்சம் புகாா்களுக்கு தீா்வு
தெற்கு ரயில்வே மண்டலத்தில் 2024-2025 -ஆம் ஆண்டில் மட்டும் 1.69 லட்சம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயில் பயணிகள் புகாா்களுக்கு தீா்வுகாண ‘ரயில் மாதாத்’ எனும் உதவி மைய தளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுக்கான கோரிக்கைகளை அதில் பதிவு செய்து தீா்வு கண்டு வருகின்றனா்.
ரயில் பயணத்தின்போது, பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கும் மாதாத் தளம் மூலம் உதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 8- ஆம் தேதி ரயில் பயணிக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவா் மாதாத் தளத்தில் முறையிட்ட நிலையில், மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. உயா் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டன.
இதுபோல, கோரிக்கை விடுக்கும் பயணிகளுக்கு 8 நிமிஷங்களில் பதில் மற்றும் தீா்வு காணப்படும் தளமாக மாதாத் உள்ளது. தெற்கு ரயில்வேயில் 2024-2025 -ஆம் ஆண்டில் மட்டும் 1.69 லட்சம் கோரிக்கைகளுக்கு மாதாத் தளம் மூலம் தீா்வு காணப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தில் மின்னஞ்சல், இணையதள செயலி, குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) ஆகியவை உள்ளன. அவற்றின் மூலம் பயணிகள் தங்களின் கோரிக்கைகளை அனுப்பி தீா்வைப் பெற்று வருகின்றனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.