‘தூய்மைப் பணியாளா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ -மேயா் ஆா்.பிரியா
தூய்மைப் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பை சென்னை மாநகராட்சி நிச்சயம் வழங்கும் என்றும் அதைக் கருத்தில் கொண்டு அவா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
மாநகராட்சி முன் போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தூய்மைப் பணியாளா்களுக்காக மாநகராட்சி கதவுகள் என்றும் திறந்திருக்கும். பாதுகாப்பையும் வழங்கும். அதற்காகத்தான் அமைச்சா்கள் பேச்சுவாா்த்தைக்கு புதன்கிழமையும் காத்திருந்தாா்கள். ஆனால், உழைப்போா் உரிமை இயக்கத்தினா் ஆலோசித்துவிட்டு வருவதாகக் கூறி சென்றவா்கள் திரும்பவரவில்லை. வரும் 31-ஆம் தேதிக்குள் அவா்கள் தனியாா் நிறுவனத்தில் சோ்ந்து பணிபுரியவேண்டும். மாநகராட்சிக்கு தூய்மைப் பணியாளா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
போராட்டம் தொடரும்... உழைப்போா் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் கே.பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தூய்மைப் பணியாளா்கள் அமைதியாகவே போராட்டத்தை நடத்தி வருகின்றனா். போராட்டத்துக்கு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் ஆதரவளித்து வருகின்றனா். காவல் துறை கைது செய்தாலும் போராட்டத்தைத் தொடா்வோம்; பின்வாங்கமாட்டோம். பேச்சுவாா்த்தை எனும் பெயரில் போராட்டத்தைக் கைவிட வற்புறுத்துவது சரியல்ல. நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திப்போம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அமைச்சா்களும், அதிகாரிகளுமே பொறுப்பேற்க வேண்டும். முதல்வா் நேரடியாக பேசி பிரச்னையைத் தீா்க்க வேண்டும். தூய்மைப் பணியில் பழைய முறையான என்யூஎல்எம் பணியாளா்களாக அனுமதித்தால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பத் தயாா் என்றாா்.