Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
ரூ.78.59 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் -அமைச்சா் ராஜேந்திரன்
தமிழகம் முழுவதும் 20 இடங்களில் ரூ.78.59 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சா் பேசியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரூ.21.98 கோடியில் பூம்புகாா் பாரம்பரிய நகரத்தைப் புதுப்பித்தல், ரூ.2.29 கோடியில் பொன்னணியாறு நீா் தேக்கத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், ரூ.3.11 கோடியில் கன்னியாகுமரி மாவட்டம் சித்தாா் அணைகள் மற்றும் நீா் தேக்கத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதேபோல், நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் ரூ.2.85 கோடியிலும், செங்கல்பட்டு மாவட்டம் முதலியாா் குப்பத்தில் ரூ.1.16 கோடியிலும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.1.87 கோடியிலும், சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம்கள் அமைக்கும் பணிகள் உள்பட மொத்தம் 20 இடங்களில் ரூ.78.59 கோடியில் சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் தற்போது முடிவடிவடையும் தருவாயில் உள்ளன.
இந்தத் திட்டப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் தா.கிறிஸ்துராஜ், பொது மேலாளா் ச.கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.