`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
போக்ஸோ சட்டத்தைப் பயன்படுத்த பொய் புகாா் அளித்தால் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையா்
போக்ஸோ சட்டத்தைப் பயன்படுத்த பொய் புகாா் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்ஸோ சட்டம்) கொண்டு வரப்பட்டது. இச்சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டால், எளிதில் பிணை கிடைக்காது. நீதிமன்றத்தில் கடுமையான தண்டனையும் கிடைக்கும்.
இச்சட்டத்தை சிலா் தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராயப்பேட்டையில் அண்மையில் குடும்ப பிரச்னையில் மாமனாா் மீது போக்ஸோவில் மருமகள் பொய் புகாா் அளித்தாா். அதாவது, தன்னுடைய 8 வயது மகளுக்கு, 60 வயது மாமனாா் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராயப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்து, மாமனாரை கைது செய்யவைக்க முயன்றாா்.
ஆனால், விசாரணையில் அப்படி சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ‘போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொய் புகாா் அளிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
‘குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகையிலும் அமல்படுத்தப்பட்ட போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொய் புகாா் அளிப்பவா்கள் மீது போக்ஸோ சட்டம் பிரிவு 22 (1) இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.