பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தத் தோ்வா்கள் தங்களுக்கான விடைத்தாள் நகலை வியாழக்கிழமை
(ஆக.14) பிற்பகல் முதல் இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்வா்கள் இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்யலாம். தொடா்ந்து, மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் வெற்றி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து இந்த விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஆக.18-ஆம் தேதி காலை 11 மணி முதல் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.