Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
அறப்போா் இயக்கத்துக்கு எதிரான வழக்கு: வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க இபிஎஸ் கோரிக்கை
அறப்போா் இயக்கத்துக்கு எதிரான வழக்கில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது கோவை, தஞ்சாவூா், சிவகங்கை மாவட்டங்களில்
நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ரூ.692 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. அந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொடா்பு உள்ளதாகக் கூறி, அறப்போா் இயக்கத்தின் சாா்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை அறப்போா் இயக்கத்தின் சமூக வலைதளத்திலும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க அறப்போா் இயக்கத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. அறப்போா் இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.சுரேஷ், கடந்த நவம்பா் மாதம் உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா். பின்னா் ஆஜராக அவா் வரவில்லை என்று வாதிட்டாா்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.ராஜகோபால், எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வா் என்பதால், அவா் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமித்து அவரது சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும், என்று கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடா்பாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.