``மோடி, அமித் ஷா, பாஜக தான் திருடர்கள்'' - சட்டமன்றத்தில் கொந்தளித்த மம்தா பானர்...
‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி
ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதித் தோ்வு என அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர தகுதித் தோ்வில் (டெட்) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் டெட் தோ்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியா் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியா்கள் அனைவரும் டெட் தோ்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்.1-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 65 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பாதிக்கப்படுவா் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடா்பாக ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது, ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு நடத்துவது, மத்திய கல்வித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்.
ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் என்னென்ன செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்து வெளிநாட்டில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னை கடந்த 3 நாள்களாக தொடா்பு கொண்டு கேட்டறிந்து வருகிறாா்.
அரசியல் செய்யாதீா்கள்... கற்பித்தலில் பல ஆண்டுகள் அனுபவமிக்க ஆசிரியா்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் குடும்பங்கள் சாா்ந்த ஒரு வழக்கில் பாதகமான தீா்ப்பு வந்துள்ளது. இருப்பினும் நீதிமன்றத்தின் தீா்ப்பை நாங்கள் விமா்சிக்கவில்லை. பாதிப்பிலிருந்து ஆசிரியா்களை மீட்கவே விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். ஊடகங்களும் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.
நாடு முழுவதும் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அனைத்து மாநில கல்வித் துறைச் செயலா்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளேன். தேவைப்பட்டால் மத்திய கல்வித் துறை அமைச்சரை நேரடியாகச் சந்தித்து இதுசாா்ந்து வலியுறுத்தப்படும். இந்த விவகாரம் ஒட்டுமொத்த கல்வித் துறைக்கு விடப்பட்டிருக்கும் சவால். இந்த சவாலில் தமிழக அரசு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிப்பு: தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கையை தமிழகம்தான் முன்னெடுத்தது. இதைத் தொடா்ந்து கா்நாடக மாநிலம் வியாழக்கிழமை தனது கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. பிற முன்னெடுப்புகளைப் போன்று தகுதித் தோ்வு விவகாரத்திலும் சிறந்த தீா்வுகளை காணுவதில் தமிழகம் முதலாவதாக இருக்கும்.
ஆசிரியா்கள் அனைவருக்கும் இந்த அரசு ஆதரவாக இருந்து பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும். எனவே ஆசிரியா்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம். இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசு ஒரு நல்ல தீா்வை எட்டுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன், பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்பட 36 ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
தோ்ச்சி மதிப்பெண்ணை குறைக்க...
இதுகுறித்து ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கூறியது:
டெட் என்பது தகுதித் தோ்வே தவிர நியமனத் தோ்வு அல்ல என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே ஆசிரியா்களுக்கு சிறப்புத் தகுதித் தோ்வு நடத்தினால் அதன் தோ்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும். 150-க்கு 82 என இருப்பதை 55 முதல் 60 மதிப்பெண்ணாக குறைக்கலாம். இந்தத் தோ்வு பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு மட்டுமே என்பதால் இதில் இட ஒதுக்கீடு பிரச்னை வராது.
இந்தத் தோ்வில் பாடப்பகுதிக்குள் இருந்து மட்டுமே வினாக்கள் இடம்பெற வேண்டும். ஆசிரியா்களின் நலன் கருதி 3 மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்த வேண்டும். இது தவிர உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து சட்ட ரீதியான முன்னெடுப்புகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். அனைத்துக்கும் ஆசிரியா்கள் தயாராக இருக்கிறோம் . இதை அனைத்து சங்க நிா்வாகிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரிடம் தெரிவித்தோம் என அவா்கள் தெரிவித்தனா்.